Friday, 11 December 2009

தர்மசாஸ்திரம் கூறும் கல்வி



அறியாமையே அனைத்து இன்னல்களுக்கும் காரணம். கல்வியும் அதனால் கிடைக்கும் அறிவும் நமது அறியாமையை அகற்றும். கல்வியை எப்போது தொடக்கலாம்? 5 வது வயதில் இந்தப் பருவத்தில் இருந்துதான் காதால் கேட்பதை மனதில் பதியவைக்கும் தாரணா சக்தி செயல்படுமாம். எனவே 5 வயது முதல் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது தர்மசாஸ்திரம்.


கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. பிறருக்குக் கொடுத்தாலும் குறையாத செல்வம் கல்விச் செல்வம்தான். பொருள் ஈட்டி, வாழ்வை செழிப்பாக்குவது ஒன்றே கல்வியின் நோக்கம் அல்ல. கல்வியால் அறிவு பெருக வேண்டும். நல் வாழ்க்கையும் அமைய வேண்டும். முக்கியமாக தான் கற்றதை பிறருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.


நிலம், வீடு, வாகனம் போன்ற நமது சொத்துகளை மற்றவர்கள் சொந்தம் கொண்டாடலாம். ஆனால் கல்வியை அபகரிக்கவோ, கொள்ளை அடிக்கவோ முடியாது. செல்வச் சேமிப்புக்கு வரி உண்டு. கல்விச் சேமிப்புக்கு எந்த வரியும் இல்லை. முக்கியமாக கல்விச் செல்வம் கிடைத்துவிட்டால் மற்ற செல்வங்களைத் தேடிப்போக வேண்டாம். அவை அனைத்தையும் நமது கல்வித்திறனே பெற்றுத் தரும்.


கல்வியில் மனநிறைவு ஏற்பட்டால் சிந்தனையில் தடுமாற்றம் நிகழாது. மகிழ்ச்சியை எளிதில் சந்திக்கலாம். பிறக்கும் போதே நீறுபூத்த நெருப்பு போல் மனிதனுடன் ஓட்டிக்கொண்டிருக்கும் மிருக இயல்பை மாற்றுவதும் கல்விய றிவே. மனிதனின் 6 வது அறிவை அறவழியில் பயன்படுத்த உதவுவதும், அதை செம்மையாக்குவதும் கல்விதான்.


பிஞ்சு உள்ளத்தில் மற்ற சிந்தனைகள் ஏழாமல், கல்வியில் மட்டுமே அவர்கள் லயித்திருக்க குருகுலவாசத்தைப் பரிந்துரைத் தது தர்மசாஸ்திரம். கர்மவினை காரணமாக, பூர்வஜென்ம இயல்புகள் நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தம், மாமிசம், எலும்பு, மஜ்ஜை, சுக்ரம் போன்ற தாதுக்கள் குன்றி, உடல் தளர்ந்த நிலையிலும் நகமும் முடியும் தடையில் லாமல் வளரும். அதுபோல, அறியாமையும் தானே வளர்வது.


இத்தகைய அறியாமையை அகற்ற கல்வி கற்கும் சூழலில் சில நல்ல நடைமுறைகளை சிரத்தையுடன் கடைப்பிடிக்கும்படி தர்மசாஸ்திரம் அறிவுறுத்தும்.


இதற்கு குருகுல வாசம் உதவும். அதிகாலை நீராடல், காலைக் கடன்களை செவ்வனே நடைமுறைப்படு த்துதல், குருவின் உத்தரவுக்குப் பணிதல், யாசகம் எடுத்து அளவுடன் உண்ணுதல். இரவில் உறங்கி இளைப்பாறுதல், பகலில் உறங்காமல் இருத்தல், மற்ற வேளைகளில் கல்வியில் கவனம் செலுத்து தல் ஆகிய பழக்க வழக்கங்களை குரு குலவாசத்தில் கடைப்பிடிப்பர்.


குடும்பம் மற்றும் சமுதாயத்தின் தாக்கம் பாதித்து விடாமல் கல்வியில் மட்டுமே மனம் லயித்திருக்க, குருகுலவாசம் வாய்ப்பு தந்தது. குருகுலத்தின் சட்டதிட்டங்கள் அறியாமையை அகற்றும், இதன் பலனாக கல்வியில் ஏற்படும் தெளிவு நம்மனதை செம்மையாக்கும்.


அரசர்களும் அந்தனர்களும் குருகுலவாச த்தை ஏற்று கல்வி பயின்றவர்கள். காலம் கடந்து பிறந்த தன் குழந்தைகள் மீது அளவற்ற பற்று வைத்திருந்தாலும், எந்த தயக்கமும் இன்றி அவர்களை குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார் தசரதர். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவும் குசேலனும் குருகுலத்தில் ஒன்றாகக் கல்வி கற்றவர்கள்.


ஆமாம் அரசன், ஆண்டி எனும் பாகுபாடு இன்றி அனைவரும் குருகுலம் வந்து கல்வி கற்பதைக் கடமையாக ஏற்றனர். கல்வி மட்டுமே ஒருவனை நல்ல குடிமகனாக மாற்றும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.


மனிதப் பிறவி சிறந்தது எனக் கூறும் ஆதிசங்கரர், அதை நிறைவு செய்யும் வழிமுறைகளையும் பரிந்துரைத்தார். மனதின் மாசுகளை மனிதன் அகற்ற வேண்டும். வேதம் சொல்லும் அன்றாட அலுவல்களை பலனை எதிர்பாராமல் அறவழியில் நிறைவு செய்யும்போது மனதின் மாசுகள் அகன்று விடும். சலனப்படுவது மனதின் இயல்பு.


பிற எண்ணங்களைத் துறந்து கடவுளில் மனதை நிலைநிறுத்த வேண்டும். வேதம் சொன்ன கருத்துகளின் துணையுடன் தத்துவத்தை ஆராய முற்பட வேண்டும். தத்துவ விளக்கம் தோன்றியதும், அறியாமை தானாகவே அகன்று விடும் என்றெல்லாம் போதித்த ஆதிசங்கரர் எந்தத் தத்துவத்தை அறிந்தால் எல்லா அறிவும் கிடைத்து விடுமோ அதுவே சிறந்த அறிவு என்கிறார்.


மனிதனாகப் பிறந்தவன் தன் உடல் இயக்கத்துக்குக் காரணம் பரம்பொருளே என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், தன்னை பரம்பொருளில் இருந்து வேறு பட்டவனாகப் பார்க்கிறான். அவனது பார்வை பொய் என்பதை உணர்ந்தால், பரம் பொருளை அறிந்தவனாவான் என்பது அவரது கருத்து. ஸ்ரீ ஆதிசங்கரர் போன்ற மகான்களின் கருத்துகளும், புராண. இதிகாசங்களும் அறியாமையை அகற்றி அறிவை ஊட்டும்.


சக மனிதர்களின் சிந்தனைகள் மாறுபடும். இதைக் கருத்தில் கொண்டு மாறுபட்ட சிந்தனைகளுடன் கூடிய தத்துவங்கள் தோன்றின. ஆனால், குறிக்கோள் ஒன்றுதான், இந்தத் தத்துவங்கள் யாவும், மக்களின் தரத்தை உணர்ந்து, கருணையுள்ளம் படைத்த சிந்தனையாளர்கள் அளித்த அன்பளிப்பாகும்.


சிலருக்கு வேதம் தத்துவ விளக்கம் அளிக்கும். சிலருக்கு மீமாம்சை, ஒரு சிலருக்கு வேதாந்தம், ஸாங்க்யம், யோகம், நியாயம், வைசேஷிகம், பெளத்தம், ஜைனம், சார்வாகம் இப்படி சிந்தனை பேதங்கள் யாவும் மனித மனதுக்கு விருந்து.


இவையனைத்தும் அன்றைய குருகுலத்தில் கிடைத்தது. அன்றைய குடிமகன், கல்வியில் நிறைவு பெற்ற பிறகே சமுதாயத்தை சந்தித்தான். அவனது பார்வையில் சமுதாயம் சொர்க்கமாக இருக்கும் மகிழ்ச்சியோ துயரமோ. அவனை பாதிக்காது சிந்தித்து செயல்பட்டு சந்தோஷத்தை சந்தித்தான்.


உலகவியலுடன் வாழ்வை முடித்துக் கொள்வது சிறப்பல்ல. உள்ளத்தையும் மேன்மையுறச் செய்ய வேண்டும். புலன்களின் வேட்கையைத் தணிப்பதில் மட்டும் அக்கறை இருந்தால் போதாது. புலன்களை இயக்கும் இயக்குநரையும் கவனிக்க வேண்டும். மனமது செம்மையானால் புலன்கள் நம் வசப்படும்.


அப்போது உலகவியலை சுவைக்கத் தகுதியான உடல் சுகாதாரமும் கிடைக்கும். உடலின் உபாதைகளை வியாதி என்போம். உள்ளம் சந்திக்கும் உபாதைக்கு ‘ஆதி’ என்று பெயர். உடலின் பிணி, உள்ளத்தையும் அலைக்கழிக்கும். ஆகவே உடல், உள்ளம் இரண்டையும் பராமரிக்க வேண்டும் என்கிறது ஆயுர் வேதம். குருகுலம் உடலைப் பேணுவதுடன் மனதை பராமரிக்கவும் வழிகாட்டிற்று.


இன்றைய இளைஞர்களின் குருகுலம் புராணங்களும் இதிகாசங்களும்தான். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சமய இலக்கியங்களைப் படிக்க வேண்டும். அவை போதிக்கும் அறநெறிகளை மனதில் கொணடு, வாழப் பழக வேண்டும்.


‘படிப்பில்லாதவன், கொம்பும் வாலும் இல்லாத பசுமாட்டுக்கு இணையானவன்’ என்று பர்த்ருஹரி கூறுவார். ஆகவே நிறையப் படிக்க வேண்டும்.


பாடப் புத்தகங்களை மட்டுமன்றி வாழ்க்கைப் பாடத்தை உலக வாழ்க்கைக்கும் அப்பாற்பட்ட மெய்ஞான விஷயங்களை மனதை செம்மையாக்கும் மகத்தான தத்துவங்களை போதிக்கிற புராண, இதிகாசங்களையும் சமய நூல்களையும் படித்தறிந்தால் வாழ்க்கை வரமாகும்.



As it is. Thank U Thinakaran - News Paper

No comments:

Post a Comment